நீலகிரி
டீக்கடை, அங்கன்வாடியில் கரடி அட்டகாசம்
|மஞ்சூரில் டீக்கடை, அங்கன்வாடியில் கரடி அட்டகாசம் செய்தது. ேமலும் மாணவர்களுக்கு வைத்திருந்த முட்டைகளை குடித்தது.
மஞ்சூர்
மஞ்சூரில் டீக்கடை, அங்கன்வாடியில் கரடி அட்டகாசம் செய்தது. ேமலும் மாணவர்களுக்கு வைத்திருந்த முட்டைகளை குடித்தது.
கரடி நடமாட்டம்
மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து வந்தது. இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் பஜார் பகுதிகளில் உலா வருவதும், பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று மறைவதுமாக இருந்தது.
ஏற்கனவே மஞ்சூர், கொட்டரகண்டி, கண்டிமட்டம் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த கரடி, ஒரு கட்டத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பஜார் பகுதியிலும் சுற்றித்திரிந்தது. மேலும் அங்குள்ள டீக்கடைகள், அரசு பள்ளி, கோவிலில் புகுந்து பொருட்களை சூறையாடி வந்தது. எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
டீக்கடை சூறை
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து தொலைதூரத்தில் உள்ள பங்கி தபால் வனப்பகுதியில் விடுவித்தனர். அதன்பின்னர் கரடி தொல்லை குறைந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.
இந்தநிலையில் மீண்டும் கரடியின் நடமாட்டம் தொங்கியுள்ளது. கடந்த 24-ந் தேதி இரவு மஞ்சூர் அருகே உள்ள ஓணிகண்டி பகுதியில் உலா வந்த கரடி, கனகன் என்பவரது டீக்கடையின் பக்கவாட்டு தகர தடுப்பை உடைத்து உள்ளே புகுந்தது. தொடர்ந்து உணவு பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, உள்ளே இருந்த பொருட்களை சூறையாடிவிட்டு சென்றது.அதன்பின்னர் நள்ளிரவில் மஞ்சூர் பஜார் பகுதிக்கு சென்ற கரடி, நீண்ட நேரம் கடைவீதியில் உலா வந்தது.
முட்டைகளை குடித்தது
அப்போது பஜார் பகுதியில் இருந்த தெருநாய்கள் விரட்டியதால் மேல்பஜார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நுழைவு வாயிலை தாண்டி உள்ளே குதித்துள்ளது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்த அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு மாணவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த முட்டைகளை குடித்த கரடி, பொருட்களையும் சூறையாடியது. ஒரே இரவில் 2 இடங்களில் கரடி அட்டகாசம் செய்த சம்பவம் மஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.