தேனி
மூலவைகை ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரடி
|கடமலைக்குண்டு அருகே மூலவைகை ஆற்றில் கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் மலையடிவாரத்தில் மூலவைகை ஆறு செல்கிறது. தற்போது நீர்வரத்து இல்லாமல் உள்ள ஆற்றின் நடுவே நேற்று கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து கரடியின் உடலை மீட்டு கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர் வெயிலான் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கரடியின் உடல் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள பகுதியில் புதைக்கப்பட்டது.
இறந்து கிடந்தது பெண் கரடி, அதற்கு 10 முதல் 12 வயது வரை இருக்கலாம் என்றும், கரடியின் உடலில் சந்தேகப்படும்படியான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கால்நடை டாக்டர் கூறினார்.
ஏற்கனவே மலையடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கரடிகளின் அட்டகாசம் அதிக அளவில் காணப்பட்டது. தற்போது காயங்களின்றி கரடி இறந்து கிடந்ததால், அதற்கு யாரேனும் விஷம் கொடுத்து கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கூராய்வு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கரடி இறந்து போனதற்கான முழு விவரமும் தெரியவரும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.