தர்மபுரி
வரத்து அதிகரிப்பால்பீன்ஸ் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது
|தர்மபுரியில் வரத்து அதிகரிப்பு காரணமாக பீன்ஸ் விலை நேற்று கிலோவிற்கு ரூ.10 குறைந்தது. உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.75-க்கு விற்பனையானது.
பீன்ஸ்
பொதுமக்களால் அதிகளவில் விரும்பி சாப்பிடப்படும் காய்கறி வகைகளில் பீன்ஸ் முக்கிய இடத்தை பெறுகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ள மலைப்பிரதேசங்கள் மற்றும் சமவெளி பகுதிகளில் பீன்ஸ் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, ஏற்காடு, ஓசூர் ஆகிய பகுதிகளில் பீன்ஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நார்சத்து அதிகம் கொண்ட பீன்சில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.
ரூ.10 விலை குறைந்தது
கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உற்பத்தி குறைந்ததால் பீன்சின் விலை கணிசமாக அதிகரித்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக விலை சற்று குறைந்து ரூ.95-க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தர்மபுரிக்கு பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்தது.
நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.85-க்கு விற்பனையான பீன்ஸ் நேற்று ஒரே நாளில் 1 கிலோவிற்கு ரூ.10 குறைந்தது.
நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.75-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.85 முதல் ரூ.90 வரை பல்வேறு விலைகளில் பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு பிறகு பீன்ஸ் விலை சற்று குறைந்து இருப்பதால் அதை அதிகளவில் வாங்கி உணவில் பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.