மோதல்... முற்றுகை... ரத்தகாயம்...! ஒற்றை தலைமை விவகாரத்தில் போர்க்களமான அ.தி.மு.க அலுவலகம்
|கட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் தீர்மானக்குழு கூட்டமும், கீழ் தளத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் தீர்மானக்குழு கூட்டமும், கீழ் தளத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.சென்னை
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை எனும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வாய் வார்த்தையில் தொடங்கிய இந்த சம்பவம் தற்போது கைகலப்பு வரை சென்றுவிட்டது.
5- வது நாளாக தங்களது ஆதரவாளர்களுடன் இன்று ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை நடத்திய நிலையில், இருவரும் கட்சி அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பிரச்சினைகள் குறித்து விவாதித்த பின் ஒரு சுமுகமான முடிவு ஏற்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. ஓ பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு கூடி இருந்த அ.தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆனாலும் அவரை தொண்டர்கள் பாதுகாப்புடன் கட்சி அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். தொடர்ந்து ஜெயக்குமார் செல்லூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த நிலையில், இரு தரப்பினரும் பிரிந்து தங்கள் தலைவர்களை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர்.
கட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் தீர்மானக்குழு கூட்டமும், கீழ் தளத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
ஜெயக்குமார் படிக்கட்டு வழியாக மாடிக்கு செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயம் தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் அவரை அங்கு திரண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர்.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான மூத்த நிர்வாகி ஒருவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. விசாரணையில் தாக்கப்பட்ட தொண்டர் பெயர் மாரிமுத்து என்பதும், பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் என்பதும் தெரிய வந்தது. அவர் தனது கருத்தை செல்ல வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.இந்த சம்பவத்தால் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் போர்க்களம் போல காணப்பட்டது. காலை 11 மணி முதல் 2 மணி வரை அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது
கட்சி அலுவலகம் வன்முறைக் காடாக காட்சி அளித்த நிலையில் பெரும்பாலான செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பிரச்சினையை படம் பிடித்ததாக தனியார் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பாட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.