கடலூர்
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வசதிக்காக பேட்டரி வாகனம் இயக்கம்
|கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வசதிக்காக பேட்டரி வாகனம் இயக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் அதிகம் பேர் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வருகிறார்கள். அப்படி வரும் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து மனுக்கள் பதிவு செய்யும் இடத்திற்கு செல்ல சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் பேட்டரி வாகனம் மூலம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பேட்டரி வாகனத்தை சமீபத்தில் வழங்கினார்.
அந்த வாகனத்தை நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து, சிறிது தூரம் வாகனத்தில் சென்றார். தொடர்ந்து இந்த வாகனத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை ஏற்றி, இறக்கும் சேவை தொடங்கியது. ஒரே நேரத்தில் 10 பேர் வரை இந்த வாகனத்தில் அமர்ந்து செல்ல முடியும். இதற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.