< Back
மாநில செய்திகள்
ஹைட்ராலிக் வசதியுடன் பேட்டரியில் இயங்கக்கூடிய 3 சக்கர வாகனம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஹைட்ராலிக் வசதியுடன் பேட்டரியில் இயங்கக்கூடிய 3 சக்கர வாகனம்

தினத்தந்தி
|
18 Jun 2023 3:14 AM IST

தஞ்சை ஒன்றியத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் வகையில் ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய நவீன பேட்டரி வாகனம் வாங்கப்பட்டு ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை ஒன்றியத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் வகையில் ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய நவீன பேட்டரி வாகனம் வாங்கப்பட்டு ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

589 ஊராட்சிகள்

தஞ்சை மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டம் 3,411 சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்டது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகள், 3 வருவாய் கோட்டங்கள், 9 தாலுகாக்கள் உள்ளன. மேலும் 20 பேரூராட்சிகளும், 14 ஊராட்சி ஒன்றியங்களும், 589 ஊராட்சிகளும் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 906 வருவாய் கிராமங்கள் உள்ளன.மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பெறப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அவை உரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதே போல் கிராமப்புறங்களிலும் தற்போது குப்பைகள் பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு, வீடாக சென்று சேகரிக்கப்பட்டு வருகின்றன.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், அந்த பகுதியில் உள்ள குப்பைகள் சேகரிக்கும் இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.

நவீன பேட்டரி வாகனங்கள்

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக தற்போது நவீன குப்பை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி தஞ்சை ஒன்றியத்தில் மட்டும் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக 70 பேட்டரியால் இயங்கக்கூடிய நவீன ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய பேட்டரி வாகனம் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் பனகல் கட்டிட வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெரிய ஊராட்சிகளுக்கு 2 வாகனங்களும், இதர ஊராட்சிகளுக்கு ஒரு வாகனமும் வழங்கப்பட உள்ளன.

தானாக கொட்டும் வசதி

இந்த வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதோடு, அவற்றை எடுத்துச்சென்று குப்பைக்கிடங்கில் ஹைட்ராலிக் வசதியுடன் தானாகவே குப்பைகளை கொட்டும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள வாகனங்களில் இருந்து குப்பைகளை ஆட்கள் தான் தள்ளி விட வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனிடம் கேட்ட போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இந்த வாகனங்கள் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வரவழைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் உள்ள பேட்டரியை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் வாகனம் இயங்கும். முன்பு பேட்டரி வாகனங்களுக்கு பதிவு எண்கள் கிடையாது.

பதிவு எண்கள் பெறுவதற்கு முயற்சி

ஆனால் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

இதனால் வாகனங்களுக்கு பதிவு எண் வேண்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து வாகனங்களை எடுத்து வர கூறும் போது எடுத்துச்சென்று பதிவு எண் பெறப்படும்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்