விழுப்புரம்
மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக மீண்டும் பேட்டரி கார் சேவை
|விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
விழுப்புரம்
விழுப்புரம் ரெயில் நிலையம்
தமிழகத்தில் முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமாக விழுப்புரம் ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி, ஹவுரா, மும்பை, திருப்பதி உள்ளிட்ட வட மாநில பகுதிகளுக்கும் விழுப்புரம் வழியாக ரெயில் போக்குவரத்து உள்ளது. இதனால் விழுப்புரம் ரெயில் நிலையம் எந்நேரமும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கும்.
இந்த ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோரின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமமின்றி ஏறி தாங்கள் செல்ல வேண்டிய நடைமேடைக்கு இலவசமாகவும், எளிதாகவும் சென்று ரெயில் பயணம் மேற்கொண்டனர்.
பழுதுபார்ப்பு பணிக்காக
ஆனால் இந்த பேட்டரி கார் சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாத கடைசியில் பழுதுபார்ப்பு (சர்வீஸ்) பணிக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு பழுதுபார்ப்பு பணி முடிந்து மீண்டும் அந்த பேட்டரி கார், விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
இதன் காரணமாக ரெயில் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் நடைமேடைகளுக்கு படிக்கட்டு வழியாக ஏறிச்செல்ல மிகவும் சிரமப்பட்டனர். எனவே விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட பேட்டரி காரை மீண்டும் கொண்டு வந்து பயன்பாட்டுக்கு விட வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் தொடக்கம்
இந்த நிலையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக தற்போது மீண்டும் பேட்டரி கார் கொண்டு வரப்பட்டு அதன் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து இங்குள்ள 6 நடைமேடைகள் வரை மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை ஏற்றிச்சென்று விடுவதற்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பேட்டரி காரில் ஒரே நேரத்தில் 6 முதல் 7 பேர் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவை 24 மணி நேரமும் இயங்கும் என்றனர்.