ராமநாதபுரம்
விஜய், அஜித் ரசிகர்கள் மீது தடியடி
|விஜய், அஜித் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.
அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திரைப்படங்களை பார்க்க அவர்களின் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். நேற்று ராமநாதபுரத்தில் இந்த திரைப்படங்கள் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த படத்தை காண வந்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக பாலாபிஷேகம், வெடி போடுதல், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் கோஷமிட்டு வந்தனர். இந்நிலையில் திரையங்கம் முன்பு சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். பிற்பகலில் 2.30 மணி காட்சிக்கு வந்த அஜித் ரசிகர்கள் திரையரங்குக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த அஜித் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கோஷங்களை எழுப்பினர்.
இதனை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கண்டித்து கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், ரசிகர்கள் அதனை கேட்காமல் கூச்சலிட்டதால் போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். சிலரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்திற்கு வந்த ரசிகர்களும் ரகளையில் ஈடுபட்டதால் அவர்களையும் போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர்.