< Back
மாநில செய்திகள்
நண்பர்களுடன் குளித்தபோது: ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி - காதல் திருமணம் செய்த 20 நாளில் பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

நண்பர்களுடன் குளித்தபோது: ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி - காதல் திருமணம் செய்த 20 நாளில் பரிதாபம்

தினத்தந்தி
|
7 July 2022 12:14 PM IST

நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலியானார். காதல் திருமணம் செய்த 20 நாளில் இந்த சோகம் நேர்ந்துவிட்டது.

சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 22). இவர், நகை கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 20 தினங்களுக்கு முன்பு தான் இவர், தான் காதலித்து வந்த பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று வருவதாக காதல் மனைவியிடம் சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் தனது நண்பர்கள் மணிகண்டன், ஜனார்த்தனன், அருண் அஜய் ஆகியோருடன் சோழிங்கநல்லூர் வந்தார். அங்குள்ள கடையில் மது அருந்திய பிறகு பெரும்பாக்கம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நண்பர்கள் அனைவரும் பெரும்பாக்கம் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது நண்பர்களுக்குள் நீச்சல் போட்டி நடத்தியதாக தெரிகிறது. விஜயகுமாரும், நண்பர் ஒருவரும் ஏரியில் இறங்கி தண்ணீரில் நீச்சல் அடித்தனர்.

அப்போது விஜயகுமார் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய விஜயகுமாரை தேடினர். அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், ஏரியில் இருந்து விஜயகுமார் உடலை மீட்டனர். விஜயகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்