< Back
மாநில செய்திகள்
நெம்மேலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் குளிக்க தடை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நெம்மேலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் குளிக்க தடை

தினத்தந்தி
|
9 Aug 2023 12:37 PM IST

நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நெம்மேலி ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகை அமைத்து எச்சரித்துள்ளனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பம் கடற் கரை பகுதி இயற்கை எழில் சூழந்த பரந்து விரிந்த அழகிய கடற்கரை பகுதியாகும். இந்த கடற்கரை பகுதியில் 1990-களில் வந்த தமிழ் சினிமா படங்களில் படப்பிடிப்பு நடந்த புகழ்பெற்ற கடற்கரை பகுதியாகும். இங்கு பலத்த கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு இங்குள்ள சிமெண்டு சாலை மற்றும் அம்மன் கோவிலின் முன்பகுதி இடிந்து சேதமடைந்தது.

தமிழக அரசும் இந்த நெம்மேலி பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நடுகற்கள் கொட்டி தூண்டில் வளைவு அமைக்க அரசாணை பிறப்பித்து பல மாதங்கள் ஆகியும், ஆணை பிறப்பிக்கப்பட்டதோடு சரி நிதி ஒதுக்கீடு செய்யப்படாததாலும், அதற்கான டெண்டர் விடப்படாததாலும், இன்னும் அதற்கான பணிகளும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையே ஏற்கனவே சிமெண்டு சாலை இடிந்து சேதமடைந்த நிலையில் மேலும் கடல் முன்னோக்கி வந்து கொண்டே இருப்பதால் அங்குள்ள அம்மன் கோவில் முற்றிலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

அதேபோல் ஒருபுறம் படகு, மீன் பிடி வலைகளை வைக்க இடம் இல்லாமலும் மீனவர்கள் பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையே கடல் அரிப்பால் இந்த கடல் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், கடல் அரிப்பால் அடித்து செல்லப்பட்ட சிமெண்டு கான்கிரிட் சிதறல்கள் கடலுக்குள் உள்ளதாலும் இங்கு கடலில் குளிக்கும் பொதுமக்கள் பலர் அவ்வப்போது அதன் மீது மோதி காயமடைகின்றனர்.

அதேபோல் மீனவர்களின் படகுகள் கவிழ்ந்து அவர்களும் ஒரு சில நேரங்களில் காயமடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கடந்த வாரம் ஒரு மீனவரின் படகு கவிழ்ந்து அவரும் காயமடைந்து, கரை திரும்பி உள்ளார். எனவே ஆபத்தான கடல் பகுதி என இந்த நெம்மேலி கடல் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி எச்சரிக்கை பலகை அமைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நெம்மேலி ஊராட்சி நிர்வாகத்தினருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான் மேற்பார்வையில் அங்கு எச்சரிக்கை பலகை அமைத்து கடலில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று கடற்கரையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை பலகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்