< Back
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் குளிக்க நீச்சல் குளம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் குளிக்க நீச்சல் குளம்

தினத்தந்தி
|
8 Dec 2022 4:16 PM IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட யானைகள் இருப்பிடத்தில் யானைகள் குளிக்க நீச்சல் குளம் திறக்கப்பட்டது.

வண்டலூர் பூங்கா

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தற்போது ரோகிணி மற்றும் பிரக்ருதி ஆகிய 2 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2 தனியார் நிறுவனங்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வண்டலூர் பூங்கா நிர்வாகத்துக்கு துணை புரிந்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் யானைகளுக்கான 'கிரால்' கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு சமையலறை, யானைகள் பராமரிப்பாளர்களுக்கு தங்கும் வீடு, யானைகள் குளிப்பதற்கு வசதியாக நீச்சல் குளம் மற்றும் தண்ணீர் தெளிப்பான் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பூங்கா இயக்குனர் திறப்பு

யானைகள் இருப்பிடங்களில் இருந்த புதர்கள், களைகள் அகற்றப்பட்டு, அகழி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 ஏக்கர் அளவில் யானைகளுக்கான தீவன தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட அனைத்து பணிகளும் புதுப்பிக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் நேற்று பூங்கா இயக்குநர் சீனிவாஸ் ராரெட்டி, அவற்றை திறந்து வைத்தார்.

இதையடுத்து பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் யானைகள் இருப்பிடத்தை கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் ஆர்.காஞ்சனா, உதவி இயக்குநர், பொ.மணிகண்ட பிரபு, பூங்கா அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்