திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை
|திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
திருச்செந்தூர்,
காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடல் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.