விழுப்புரம்
அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்
|வாக்களித்தவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை, எனவே மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்
விழுப்புரம்
நகரமன்ற கூட்டம்
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க. நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், பத்மநாபன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், ஜெயப்பிரியா சக்திவேல், பா.ம.க. கவுன்சிலர் இளந்திரையன், காங்கிரஸ் கவுன்சிலர் சுரேஷ்ராம், மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் ரியாஸ்அகமது உள்ளிட்டோர் பேசியதாவது:-
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு
நகராட்சி 36-வது வார்டில் தெருமின் விளக்குகள் எரிவதில்லை. எல்லா தெருமின் விளக்குகளையும் எல்இடி பல்புகளாக மாற்றுவதாக கூறி 6 மாதங்கள் ஆகிறது, ஆனால் நடவடிக்கை இல்லை. நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட 19 வார்டு பகுதிகளிலும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பொதுமக்களின் அடிப்படை பிரச்சினையான குடிநீர், சாலை வசதி, வாய்க்கால் வசதி ஏற்படுத்திக் கொடுங்கள், வாக்களித்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. டெண்டர் விடப்பட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.
வாய்க்கால் சீரமைப்பு
மழைக்காலம் வருவதற்குள் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். 41-வது வார்டில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டி வைத்து பராமரிக்க வேண்டும். 29-வது வார்டில் 4 குடிநீர் தொட்டிகளின் மின் மோட்டாரை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அடிப்படை பணிகளான குடிநீர் வசதி, சாலை வசதியை முதலில் செய்து தாருங்கள். கே.கே.சாலையில் பயன்பாடு இன்றி கிடக்கும் இலவச கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 39-வது வார்டில் கல்லூரிகளுக்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
பள்ளியை சீரமைக்க
பானாம்பட்டு காலனியில் இடியும் நிலையில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியை உடனே சீரமைக்க வேண்டும். பள்ளி கட்டிடம் சீரமைப்பு பணிக்கு டெண்டர் வைப்பதில் முக்கியத்துவம் அளியுங்கள். மாதந்தோறும் நகரமன்ற கூட்டத்தை நடத்தினால்தான் உடனுக்குடன் மக்கள் பிரச்சினையை எடுத்துக்கூறி தீர்வு காண முடியும். 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தினால் எப்படி மக்கள் பிரச்சினையை தெரிவிக்க முடியும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார். இக்கூட்டத்தில் 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சிறப்பு தீர்மானமாக, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை சூட்டுவதோடு அவரது திருவுருவ சிலையையும் அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து தீர்மானிக்கப்பட்டது. இதில் நகரமன்ற கவுன்சிலர்கள் நந்தா நெடுஞ்செழியன், புல்லட் மணி, இம்ரான்கான், கலை, வடிவேல் பழனி, நவநீதம் மணிகண்டன், கோமதி பாஸ்கர், வித்தியசங்கரி பெரியார், மெரீனா சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.