செங்கல்பட்டு
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகள் - கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்
|மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரூ.2.6 கோடியில் முடிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
சர்வதேச அளவில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தை மேம்படுத்தும் வகையில் பசுமை பாரம்பரிய திட்டத்தின் கீழ் ஆதர்ஷ் எனப்படும் தேசிய முக்கிய நினைவு சின்னமாக மத்திய அரசு இந்நகரை 2016-ம் ஆண்டில் அறிவித்தது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் கலைச்சின்னம் குறித்த கருத்தியல் மற்றும் காட்சியியல் கூடம், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு மின்சார வாகனங்கள், வை-பை இணைய தொடர்பு வசதிகள், ஒரு மணி நேரத்திற்கு 500 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் குடிநீர் குழாய்கள், சுற்றுலா வரும் பயணிகள் கடற்கரை கோவில் நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலா நினைவு படம் எடுக்க செல்பி பாயிண்ட் வசதி, சுற்றுலா பேட்டரி வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை கோவில் நுழைவு வாயில் புல்வெளிகளுடன் கூடிய ரவுண்டானா, கற்களால் ஆன அமரும் இருக்கைகள், மரத்தோட்டங்கள் புதுப்பித்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டன.
அவற்றை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு பசுமை பாரம்பரிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகளை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை தொல்பொருள் ஆய்வாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.