< Back
மாநில செய்திகள்
எழுத, படிக்க தெரியாத 9183 பேருக்கு அடிப்படை கல்வி அதிகாரி தகவல்
சிவகங்கை
மாநில செய்திகள்

எழுத, படிக்க தெரியாத 9183 பேருக்கு அடிப்படை கல்வி அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
6 July 2023 12:15 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட 9,183 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட 9,183 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.

புதிய எழுத்தறிவு திட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்திட்டமிடுதல் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலா் பேசியதாவது:- தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக, முற்றிலும் தன்னார்வலர் முறையில் செயல்படுத்தப்படும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் என்ற புதிய ஐந்தாண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் முற்றிலும் எழுத படிக்க தெரியாத, 15 வயதிற்கு மேற்பட்ட 9,183 நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

459 மையங்கள்

இத்திட்டம், 2023 செப்டம்பா் மாதத்தில் தொடங்கி 2024 பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் வீதம், 6 மாதங்களுக்கு 200 மணி நேரம் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, முதற்கட்டமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களை சார்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோரை கண்டறிந்து பள்ளி தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து கள ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கேற்ப கற்போர் மற்றும் தன்னார்வலர்களை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இப்பணியானது ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் முடிக்கப்பட வேண்டும். ஒரு கற்போர் எழுத்தறிவு மையத்திற்கு 20 முதல் 25 கற்போர் என மாவட்டத்தில் 459 மையங்கள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் ஆர்வம்

இந்த மையங்களில் பள்ளிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதியில் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடைய கற்பித்தலில் ஆர்வம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் கூடிய நபர்களை கண்டறிந்து தன்னார்வலர்களாக சேவையாற்ற வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிமா பேகம் செய்திருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்