விழுப்புரம்
அடிப்படை கல்வி அறிவே மேற்படிப்பு கல்விக்கு ஏணிப்படியாக அமைந்திடும் பள்ளி விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
|அடிப்படை கல்வி அறிவே மேற்படிப்பு கல்விக்கு ஏணிப்படியாக அமைந்திடும் என்று பள்ளி விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினாா்.
விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாலை குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும், விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம், பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், இன்றைய குழந்தைகள்தான் நாளை வருங்கால சந்ததியாவார்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இப்போதே உங்களுடைய கல்வி அறிவை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே அடுத்தடுத்து வரக்கூடிய மேற்படிப்புகளில் சிறந்த முறையில் கல்வி கற்க முடியும். அதே நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக்குழந்தையும் கல்வியுடன் கூடிய விளையாட்டையும் கற்க வேண்டும். கல்வி அறிவாற்றலுக்கு உதவுகிறது என்றால் விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்றார்.
அடிப்படை கல்வி அறிவே மேற்படிப்பு கல்விக்கு ஏணிப்படியாக அமைந்திடும். எனவே இதனை நன்குணர்ந்து கல்வியை கற்று எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக விளங்கிட வேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், தாசில்தார் ஆனந்தகுமார், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், பள்ளி தலைமையாசிரியர் புஷ்பராஜ், நகரமன்ற கவுன்சிலர்கள் கோமதி, ஜெயந்தி மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.