பெரம்பலூர்
கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்
|நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லாறு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவின் மேற்கே மலையாளப்பட்டி, கோரையாறு பகுதியில் பரந்து விரிந்த பச்சைமலை தொடர் அமைந்துள்ளன. இந்த மலைத்தொடரில் மலையாளப்பட்டி, கோரையாறு பகுதிகளில் இருந்து கல்லாறு என்னும் காட்டாறு உற்பத்தியாகி மலையாளபட்டி, அரும்பாவூர், கோரையாறு தொண்டமாந்துறை, கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், வி.களத்தூர் வழியாக கடலூர் மாவட்டம் தொழுதூரில் சென்று அங்கு வெள்ளாற்றில் ஒன்று சேர்ந்து வங்க கடல் நோக்கி பாய்ந்து செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பணைகள் கட்ட வேண்டும்
இதுகுறித்து பூலாம்பாடியை சேர்ந்த விவசாயியான வரதராஜன் கூறுகையில், இந்த கல்லாற்றில் பச்சமலை தொடர்களில் பருவமழை காலங்களிலும், கோடை காலங்களிலும் பெய்யும் மழையால் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிவரும். இவ்வாறு வரும் மழை நீர் யாருக்கும் எந்த பலனும் இல்லாமல் அப்படியே கடலுக்கு சென்று கலக்கிறது.
இதனால் வேதனை அடைந்து வரும் இப்பகுதி விவசாயிகள் இந்த கல்லாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கிவைக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மலையாளப்பட்டியில் இருந்து திருவாலந்துறை வரை 3 இடங்களில் மட்டுமே இதுவரை ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்லாற்றின் குறுக்கே 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு தடுப்பணை எனக் கட்டினால் மலையாளபட்டியில் இருந்து பச்சமலை பகுதியில் பெய்யும் மழை நீரானது கல்லாற்றில் ஓடி வரும்போது இந்த தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் என்றார்.
கோரிக்கை
வெண்பாவூரை சேர்ந்த முருகேசன் கூறுகையில், கல்லாற்றில் தப்பணைகள் அமைத்தால் ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். அதோடு மட்டுமல்லாமல் எக்காலத்திலும் இந்த கல்லாற்றின் இரு கரை பகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்றார்.
பாண்டகபாடியை சேர்ந்த பழனிமுத்து கூறுகையில், தமிழக அரசு நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை பகுதியில் செல்லும் முக்கிய ஆறான கல்லாற்றின் குறுக்கே ஆங்காங்கே பெரிய அளவில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கி நீர் ஆதாரங்களை பெருக்கி இந்த பகுதியை வளமான பகுதியாக மாற்ற வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.