< Back
மாநில செய்திகள்
செல்போனில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி மீது சரமாரி தாக்குதல் - 4 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

செல்போனில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி மீது சரமாரி தாக்குதல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
30 July 2022 12:32 PM IST

சென்னை அயனாவரத்தில் செல்போனில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டதால் கணவன் மற்றும் மனைவியை சரமாரி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் கே.கே.நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). இவருடைய மனைவி சாந்தி (32). இவர், வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க சென்றார். அப்போது அங்கு மீன் வியாபாரம் செய்யும் கோட்டை முனியசாமி (36) என்பவரிடம் நல்ல மீன் கிடைத்தால் போன் செய்யுங்கள் என தனது செல்போன் எண்ணை கொடுத்தார்.

அதன்பிறகு கோட்டை முனியசாமி, சாந்தியின் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, இது குறித்து தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் மீன் மார்க்கெட்டுக்கு சென்று, செல்போனில் ஆபாசமாக பேசியது பற்றி கோட்டை முனியசாமியிடம் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோட்டை முனியசாமி, தனது நண்பர்களான கண்ணன் (35). விஜய் சங்கர் (27), காளிதாஸ் (30) ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார், சாந்தி இருவரையும் சரமாரியாக தாக்கியதுடன், மீன் வெட்டும் கத்தியாலும் வெட்டியதாக தெரிகிறது. இது குறித்து சாந்தி அளித்த புகாரின்பேரில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டை முனியசாமி உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்