புதுக்கோட்டை
மயான பாதையில் முள்வேலி அமைப்பு: முதியவரின் உடலை கொண்டு செல்ல முடியாததால் பரபரப்பு
|திருமயம் அருகே மயான பாதையில் முள்வேலி அமைக்கப்பட்டதால் முதியவரின் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளின் ேபச்சுவார்த்தைக்கு பிறகு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
முள்வேலி அமைப்பு
திருமயம் அருகே சீராத்தக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட பாதையை காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் அந்த பாதை கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும், அந்த இடம் கோவில் நிர்வாகிகள் பெயரில் உள்ளது என்று கூறி அந்த மயான பாதையில் சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் கோவில் நிர்வாகிகள் முள்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சீராத்தக்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பையா (வயது 85) என்பவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்தநிலையில், மயான பாதையை முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டிருந்ததால் அவரது உடல் வழக்கமாக மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
போலீசார் குவிப்பு
இதையடுத்து, சீராத்தக்குடி கிராம மக்கள் மற்றும் சுப்பையா உறவினர்கள் வழக்கமாக பயன்படுத்தப்படும் பாதையைத்தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்று கூறியதால் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் வழியே முதியவரின் உடலை எடுத்துச்செல்ல மாற்று வழி செய்து தருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படவே சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, திருமயம் தாசில்தார் புவியரசன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உடல் அடக்கம்
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போலீசார் மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் முள்வேலி அகற்றப்பட்டு முதியவரின் உடல் மாலை 4.30 மணியளவில் இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து இந்த பாதை பிரச்சினை நிலவக்கூடிய சூழல் உள்ளதால் மயானத்திற்கு நிரந்தரமாக ஒரு வழியை வருவாய்த்துறையினர் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.