< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை  மதுபானக்கூடம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தவர்கள் முற்றுகை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை மதுபானக்கூடம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தவர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
19 Aug 2022 9:58 PM IST

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை மதுபானக்கூடம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தவர்கள் முற்றுகையிட்டனா்.


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 224 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுபானக்கூடம் அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் 64 கடைகளுக்கு அருகில் மதுபானக்கூடம் அமைக்கலாம் என்றும் அதற்கு மதுபானக்கூடம் நடத்த விரும்புபவர்கள், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அறிவிக்கப்பட்ட 64 கடைகளுக்கு அருகில் மதுபானக்கூடம் அமைப்பதற்காக 126 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டை பகுதியில் 4 மதுபானக்கூடங்களுக்கும், சின்னசேலத்தில் 2 மதுபானக்கூடங்களுக்கும் மட்டும் விண்ணப்பம் ஏற்கப்பட்டும், மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட 120 பேர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு,மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராமுவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுபற்றி 22ந்தேதி(திங்கட்கிழமை)பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இருப்பினும் ஆத்திரமடைந்த அவர்கள், டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபற்றி 22ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்