சென்னை
பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை
|பெரம்பூரில் நிதி நிறுவனத்தில் பணத்துக்கு வட்டி தராததால் வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், முதியவர்கள் என பலர் ரூ.2 லட்சம் முதல் சுமார் ரூ.40 லட்சம் வரை டெபாசிட் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. டெபாசிட்தாரர்களுக்கு மாதம்தோறும் வட்டி தருவதாகவும், டெபாசிட் தேதி முடிந்தவுடன் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை திருப்பி தருவதாகவும் நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சுமார் 6 மாத காலமாக டெபாசிட்தாரர்கள் செலுத்திய பணத்துக்கு உரிய நேரத்தில் வட்டி கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அந்த நிதி நிறுவனம் கடந்த வாரம் 400 டெபாசிட்தாரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி அவர்களுக்கு நேற்று வட்டி பணம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. இதையறிந்த மற்ற டெபாசிட்தாரர்கள், தங்களுக்கும் வட்டி பணம் தரவேண்டும் என்று வலியுறுத்தி நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் நிதி நிறுவனம் டோக்கன் வழங்கியவர்களுக்கு மட்டும் வட்டியில் பாதி பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மற்றவர்கள் வட்டி பணம் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீதம் உள்ளவர்களுக்கு வட்டி பணம் மற்றொரு நாள் வழங்கப்படும் என நிதி நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.