< Back
மாநில செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: தென்காசி வாலிபர் கைது
மாநில செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: தென்காசி வாலிபர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2024 7:53 AM IST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

சென்னை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 21-ந் தேதி நடை சாத்தப்பட்ட பின்னர் கோவில் ஊழியர்கள் சன்னிதானத்தில் உள்ள உண்டியல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கருவறை மண்டபத்திற்கு அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தேவஸ்தான ஊழியர்கள் சன்னிதானம் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாக விசாரணை நடத்தினர். சன்னிதானம் மற்றும் பம்பையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இது தவிர சபரிமலையில் துப்புரவு உள்ளிட்ட வேலைக்கு வரும் நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் உண்டியல் பணத்தை திருடியது சபரிமலையில் துப்புரவு பணிக்கு வந்த தென்காசி மாவட்டம் கீழசுரண்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது32) என்பது தெரியவந்தது. இந்த விவரத்தை அறிந்த சுரேஷ் தப்பி ஓடினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடினர். இதையடுத்து அவர் கீழசுரண்டையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழசுரண்டைக்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த சுரேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பம்பைக்கு கொண்டு சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்