ராமநாதபுரம்
வங்கியில் அடகு வைத்த நகை மாயம்
|வங்கியில் அடகு வைத்த நகை மாயமானது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த பொட்டகவயல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கூட்டுறவு வங்கி) உள்ளது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கூட்டுறவு வங்கியை பூட்டாமல் சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் வந்து பூட்டியதோடு அதில் இருந்த நகைகள், பணம் திருடுபோகவில்லை என்று உறுதி செய்தனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பொட்டகவயல் கூட்டுறவு வங்கியில் கடன் சங்க உறுப்பினராக சேர்ந்து நகைக்கடன் பெற்றோம். இந்த கடன் தொகையை முறையாக செலுத்தி வந்த நிலையில் தற்போது நகையை திருப்பி கொள்ளலாம் என்று எண்ணி வங்கிக்கு சென்றால் நாளை வாருங்கள் என்று தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர். ஒருகட்டத்தில் எங்கள் நகை இல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் நாங்கள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். நாங்கள் வங்கியில் வைத்த நகை என்ன ஆனது யார் கையாடல் செய்தது என்று தெரியவில்லை. வங்கியை திறந்து வைத்து சென்றது நகையை காணவில்லை என்று நாடகமாடவா என்று புரியாமல் உள்ளது. வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எங்களின் நகை குறித்து விவரம் கேட்டால் அதிகாரிகள் முறையான பதிலளிக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி எங்களின் நகை என்ன ஆனது என்று கண்டறிவதோடு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.