புதுக்கோட்டை
தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக்கடன்
|தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக்கடன் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (www.tahdco.com) என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.