சென்னை
சென்னை பூக்கடையில் மின்கசிவால் வங்கியில் தீ விபத்து
|சென்னை பூக்கடையில் மின்கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, தங்க சாலை சந்திப்பில் 'சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா' வங்கி உள்ளது. தரைதளத்தில் கடைகளும், முதல் மாடியி்ல் வங்கியும் செயல்படுகிறது.
நேற்று அதிகாலை இந்த வங்கியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தண்டையார்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி லோகநாதன் மேற்பார்வையில் நிலைய அதிகாரி செல்வம் தலைமையில் 25 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் வங்கிக்குள் செல்லும் வழி முழுவதும் புகை மூட்டமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. பின்னர் நவீன எந்திரம் மூலம் புகையை உறிஞ்சி எடுத்துவிட்டு தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைத்தனர்.எனினும் தீ விபத்தில் வங்கியில் இருந்த கம்ப்யூட்டர்கள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. உடனடியாக தீ அணைக் கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.அதிகாலை நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் யாரும் வங்கியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.வங்கியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.