< Back
மாநில செய்திகள்
வங்கி ஊழியர் மனைவியை மொபட்டில் இருந்து கீழேதள்ளி தாலிச்சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை
மாநில செய்திகள்

வங்கி ஊழியர் மனைவியை மொபட்டில் இருந்து கீழேதள்ளி தாலிச்சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை

தினத்தந்தி
|
17 May 2023 1:38 AM IST

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மொபட்டை எட்டி உதைத்து வங்கி ஊழியர் மனைவியை கீழே தள்ளிவிட்டு 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றனர்.

கோவை பீளமேட்டில் நேற்று முன்தினம் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் காரில் வந்த ஒரு கும்பல் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றது. அதில் அவர் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு காருக்கு அடியில் சிக்காமல் அதிர்ஷ்டவமாசமாக உயிர் தப்பினார். அதே போன்ற கொடூரமான சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு 8.50 மணி அளவில் தனது மகனுடன் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சீனிவாசாநகர் 4-வது வீதியில் மொபட் வந்தபோது, அந்த வழியாக விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிளில் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள், நித்யாவின் மொபட்டை எட்டி உதைத்தனர். இதனால் மொபட் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் தாய், மகன் இருவரும் கீழே விழுந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நித்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுகுறித்து நித்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம வாலிபர்களை தேடிவருகிறார்கள்.

மொபட்டுடன் விழுந்ததில் தாய், மகன் இருவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்