சென்னை
வங்கி ஏ.டி.எம். வாசலில் நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
|சென்னை தேனாம்பேட்டையில் வங்கி ஏ.டி.எம். மையத்தின் வாசலில் வைத்து ரூ.5 லட்சத்தை கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
டெபாசிட் செய்ய வந்த பணம்
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மைதீன். இவர் உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவர் கமிஷன் அடிப்படையில், யாராவது கொடுக்கும் பணத்தை ஏ.டி.எம். எந்திரம் மூலம் டெபாசிட் செய்வார். தனக்கு நன்கு அறிமுகமான நஜீம் என்பவர் கொடுத்த ரூ.9 லட்சம் பணத்தை, கடந்த 20-ந் தேதி இரவு மைதீன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் டெபாசிட் செய்தார். இதில் ரூ.4 லட்சம் மட்டும் அங்கு டெபாசிட் செய்ய முடிந்தது.
மீதமிருந்த ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, இன்னொரு ஏ.டி.எம். மையத்துக்கு புறப்பட்டார். ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வந்த அவரை மர்ம கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது.
கத்திமுனையில் கொள்ளை
அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மைதீன் வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தையும் மின்னல் வேகத்தில் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர். இதை சற்றும் எதிர்பாராத மைதீன் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் கண்டனர்.
முக்கிய குற்றவாளி கைது
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜான் ஜெய்சிங் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4,500 ரொக்கப்பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பயங்கர ரவுடி என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.