தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டியில்வங்கிகணக்கு விண்ணப்பங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு
|பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக வங்கியில் கணக்கு தொடங்க விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்த சிலருக்கு வங்கிகணக்கு புத்தகம் கிடைத்ததாம். ஆனால் பலருக்கு கிடைக்கவில்லையாம். இதனையடுத்து பெண்கள் மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு சென்று இதுகுறித்து கேட்டனர். அப்போது வங்கி மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் தங்களது விண்ணப்பங்கள் வங்கிக்கு வரவில்லை என்றி கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வங்கியின் கேட் முன்பு கிடந்த குப்பை கிடங்கில் பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்கள் கிடந்தது. இதனால் விரக்தி அடைந்த பெண்கள் வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.