< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்

தினத்தந்தி
|
23 July 2023 12:20 AM IST

ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் பிரகதாம்பாளுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் பிற அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

வளையல் அலங்காரம்

விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்தநிலையில் ஆடிப்பூரத்தையொட்டி மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் மீனாட்சி அம்மன் வடிவில் வளையல் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடியில் அருகே உள்ள ஆயிப்பட்டியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பூர விழாவையொட்டி பத்ரகாளியம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலையில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

குத்துவிளக்கு பூஜை

திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் கிராமத்தில் பொய் சொல்லா மெய் அய்யனார், சுயம்பு அழகப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அய்யனாரை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்