< Back
மாநில செய்திகள்
கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
அரியலூர்
மாநில செய்திகள்

கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்

தினத்தந்தி
|
21 July 2023 11:57 PM IST

கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தாமரைக்குளம்:

வளையல் அலங்காரம்

அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் நகரில் கபிரியேல் தெருவில் உள்ள பழமையான மகா காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் கைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சக்தி விநாயகர் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் அரியலூரில் காளியம்மன் கோவில் மற்றும் குறிஞ்சான் குள தெரு பெரியநாயகி அம்மன் கோவில், எருத்துக்காரன்பட்டி, குருமஞ்சாவடி, பூக்காரத் தெரு மாரியம்மன் கோவில்களுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.மேலும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு அபிஷேகம்

இதேபோல் தா.பழூர், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாலையில் விசாலாட்சி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அம்பாளுக்கு வளையல் மாலை அணிவிக்கப்பட்டு, பிரகார வீதியுலா நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன், மகா மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், செங்குந்தபுரம் மாரியம்மன், இலையூர் செல்லியம்மன், சின்னவளையம் திரவுபதி அம்மன், வாரியங்காவல் மாரியம்மன் மற்றும் சிவன் கோவில்களில் உள்ள துர்க்கை அம்மன் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

மேலும் செய்திகள்