தேனி
பெங்களூருவில் இருந்து தேனிக்குசரக்கு வேனில் கடத்தி வந்த 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:7 பேர் கைது
|பெங்களூருவில் இருந்து தேனிக்கு சரக்கு வேனில் கடத்தி வந்த 800 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தேனி வழியாக புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தேனி-பெரியகுளம் ரோடு சந்திப்பு பகுதியில் அல்லிநகரம் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஜீப், சரக்கு வேன் வேகமாக வந்தது.
அந்த 2 வாகனங்களையும் போலீசார் மறித்தனர். ஆனால் வாகனங்கள் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் விரட்டி சென்று அந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். பின்னர் வேனில் சோதனை செய்தனர். அப்போது காலியான தக்காளி கூடைகள் மட்டும் இருந்தது. ஆனால் சரக்கு வேனின் நீளம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தக்காளி கூடைகள் அனைத்தையும் கீழே இறக்கினர்.
800 கிலோ பறிமுதல்
அப்போது வேனில் ரகசிய அறை ஒன்று இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து திறந்தனர். அதில் சுமார் 40 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது ஒரு மூட்டையில் 55 பண்டல்களில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் சுமார் 800 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து புகையிலை பொருட்கள் வேன், ஜீப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சரக்கு வேன், ஜீப்பில் வந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது யூசுப் (வயது 33), கார்த்திகேயன் (21), ஆனந்தகுமார் (32), உதயகுமார் (31), தேனி காக்கிவாடன்பட்டியை சேர்ந்த விஜயராகவன் (32), மைசூரை சேர்ந்த கெம்ப்ராஜ் (23), பெங்களூரு பண்ணார் கோட்டாவை சேர்ந்த தீபக் (23) என்பது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து மேல்விசாரணை நடத்தினர். அப்போது கைதான முகமது யூசுப் என்பவர்தான் ஜீப், சரக்கு வேனின் உரிமையாளர் என்று தெரிந்தது. மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு புகையிலை பொருட்களை அவர் கடத்தி சென்று விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து தேனி மாவட்டத்தில் உள்ள விஜயராகவன் குடோனில் பதுக்கி வைத்துவிட்டு 7 பேரும் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது.