சென்னை
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் வளையல் அலங்கார வழிபாடு
|ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் வளையல் அலங்கார வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை,
அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு வளையல் அணிவித்து அழகு பார்க்கும் உன்னதமான நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, அம்மனை மனம் குளிர தரிசனம் செய்தனர். சென்னையில் மயிலாப்பூர் கோலவிழி அம்மன், முண்டகக்கண்ணி அம்மன், பிராட்வே காளிகாம்பாள், புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மன் உள்பட அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வாங்கி வந்திருந்த வளையல்களை அம்மனுக்கு அணிவிக்க செய்து, தரிசனம் மேற்கொண்டனர். பூஜைகளுக்கு பிறகு அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள் பக்தர்களுக்கு அருட் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடபழனி முருகன் கோவில்
கோடம்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோவிலில் நடந்த வளையல் அலங்கார பூஜையில், ஏராளமான பெண் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதேபோல், சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களிலும் வளையல் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
வடபழனி முருகன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம், வளையல் மாலை அலங்காரம் நடந்தது. 500 சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலிலும் ஆடிப்பூரத்தையொட்டி வடிவுடையம்மன் உற்சவ தாயாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி வசந்த மண்டபம் முழுவதும் வண்ண கண்ணாடி வளையல்கள் தோரணங்களாக கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தாயார் பச்சை பட்டு உடுத்தி, சிறப்பு மலர் அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் பயிறுகள் மற்றும் உணவு பண்டங்களை மூட்டையாக கட்டி அம்மனுக்கு வயிற்றில் கட்டி, வண்ண கண்ணாடி வளையல் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள், 'ஓம் சக்தி பராசக்தி' என முழங்கியபடி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. விழாவில் கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.