< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாழை, தென்னைகளைசேதப்படுத்திய காட்டு யாைனகள்

தினத்தந்தி
|
13 Sept 2023 3:29 AM IST

பூதப்பாண்டி அருகே தடுப்பு சுவரை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, தென்னைகளை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே தடுப்பு சுவரை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, தென்னைகளை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

வாழை விவசாயம்

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி உடையார்கோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் தங்களது சொந்த நிலத்திலும், பலர் குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் தென்னந்தோப்புகளும் உள்ளன.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை அழித்து சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழிகள், சோலார் மின்வேலி போன்றவைகளை அமைத்தனர்.

பாலத்தில் தடுப்பு சுவர்

ஆனாலும் யானை கூட்டம் உடையார்கோணம் பகுதியில் தோவாளை கால்வாயில் உள்ள பாலம் வழியாக வந்து தோட்டத்தில் புகுந்து வாழை, தென்னைகளை சேதப்படுத்த ெதாடங்கின. இதையடுத்து யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் தோவாளை கால்வாயில் பாலத்தின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அதன்பின்பு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர் செய்ய தொடங்கினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை கூட்டம் தோவாளை கால்வாய் பாலத்தில் கட்டியிருந்த தடுப்பு சுவரை இடித்து தள்ளி விட்டு உடையார்கோணம் பகுதியில் புகுந்தது. அங்குள்ள தோட்டங்களில் புகுந்து 275-க்கும் மேற்பட்ட ஏத்தன்வாழைகள், 10 தென்னை மரங்களை மிதித்து அழித்து சேதப்படுத்தி விட்டு சென்றன. நேற்று காலையில் தோட்டத்திற்கு வந்த விவசாயிகள் வாழை, தென்னைகளை யானைகள் சேதப்படுத்தி இருப்பதை கண்டு மிகுந்த வேதனை அடைந்தனர்.

இழப்பீடு தர வேண்டும்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி மணிகண்டன் கூறும்போது, 'யானைகள் வாழைத்தோட்டத்தில் புகுந்த 275-க்கும் மேற்பட்ட வாழைகள், தென்னைகளை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இருந்தன. இவற்றை காட்டு யானைகள் அழித்ததால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு அரசு போதிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அத்துடன் காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்