< Back
மாநில செய்திகள்
வாழையில் இலை கருகல் நோய்
சேலம்
மாநில செய்திகள்

வாழையில் இலை கருகல் நோய்

தினத்தந்தி
|
9 Dec 2022 1:00 AM IST

தேவூர் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள வாழைகளில் இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேவூர்:-

தேவூர் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள வாழைகளில் இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இலை கருகல் நோய்

தேவூர் அருகே அம்மாபாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், கோனேரிபட்டி, புதுப்பாளையம், காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, குள்ளம்பட்டி, தண்ணிதாசனூர், கோணகழுத்தானூர், காவேரிபட்டி, மேட்டுபாளையம், பாலிருச்சம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேந்திரம், செவ்வாழை, பூ வாழை, கதலி, ரஸ்தாளி, மொந்தன் போன்ற வாழைகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் தேவூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வாழை மரங்களில் இலைகள் மஞ்சள் நிறமாகவும், இலைகள் கருகி வாழை தார் விடும் முன்பே சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த இலை கருகல் நோய் குறித்து தேவூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

10 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய கதலி, நேந்திரம், செவ்வாழை, பூ வாழை, தேன் வாழை, மொந்தன் வாழை உள்ளிட்ட ரக வாழைகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு வாழை சாகுபடி செய்ய 1000 வாழைக்கன்றுகள் வாங்கி வந்து நட்டுள்ளோம்.

விவசாயிகள் கவலை

ஒரு வாழைக்கன்றுக்கு ரூ.10 வீதம் 1000 மரக்கன்றுகள் ரூ.10ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி பாத்தி அமைத்தல், கன்று நடவு செய்தல், களை எடுத்தல், மண் அணைத்தல், உரம் இடுதல், வாழை கன்றுக்கு முட்டு கயிறு கட்டுதல் என ஏக்கருக்கு ரூ 70 ஆயிரம் வரையில் பராமரிப்பு செலவு செய்துள்ளோம்,

இந்த நிலையில் வாழையில் காய்கள் காய்த்து பலன் தரும் முன்பே இலைகள் கருகி சேதம் அடைந்துள்ளதால் வாழை தார் விடாமல் வாழை மரங்கள் சேதமாகி வருகின்றன. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம். எனவே தோட்டக்கலை துறையினர் தேவூர் பகுதியில் விரைந்து பார்வையிட்டு நோய் தாக்கத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்