புதுக்கோட்டை
வேங்கைவயல் விவகாரம்: ஐ.நா. சபையில் மனித உரிமை கழகத்தில் புகார்
|வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் மனித உரிமை கழகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் செயல் தலைவர் இளமுருகு முத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேங்கைவயல் விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தமிழ்நாட்டில் கருப்பு புள்ளியாக தான் இதனை கருத வேண்டும். உலகத்தில் எங்கும் நடக்காத வகையில் தீண்டாமையின் உச்சக்கட்டம் அங்கு தான் நடந்துள்ளது. 182 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், சென்னையில் தலைமை செயலாளர், டி.ஜி.பி.யை சந்தித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். டெல்லியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் கொடுத்தோம். ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
டி.என்.ஏ. பரிசோதனையே தவறு
தமிழக காவல்துறையும், தமிழக அரசும் மெத்தனம் காட்டுகிறது என்பதற்காக அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையில் மனித உரிமை கழகத்தில் வேங்கைவயல் விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்துள்ளோம். அவர்களும் இந்த விஷயத்தில் உரிய அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தனர். இதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் டி.என்.ஏ. பரிசோதனையே தவறு. குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது எந்த தேதி என்று யாருக்கும் தெரியாது. அசுத்தத்தை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை நடத்துவது வெட்கக்கேடானது. குற்றவாளிகள் யாரென்று சந்தேகப்படுகிறதை நோக்கி விசாரணையை நடத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களையே துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது.
ஜெனீவா மாநாடு
ஒரு நபர் ஆணையத்தில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விசாரணை சரியாக நடைபெறுவதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம். வேங்கைவயல் விவகாரத்தில் எந்த கட்சியும் அதிக அழுத்தம் கொடுக்கவில்லை. மனித உரிமை மீறல் தொடர்பாக அரசிடம் ஐ.நா.வின் மனித உரிமை கழகம் விளக்கம் கேட்கும். ஜெனீவாவில் அடுத்த மாதம் மாநாடு நடைபெற உள்ளது. இதில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பேச நேர அனுமதி கேட்டுள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் தப்பிக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.