< Back
மாநில செய்திகள்
3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் நிறைந்த எலி மருந்து விற்பனை செய்ய தடை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் நிறைந்த எலி மருந்து விற்பனை செய்ய தடை

தினத்தந்தி
|
3 July 2023 11:34 PM IST

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் நிறைந்த எலி மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அரசின் அறிக்கையின் மூலம் தடை செய்யப்பட்ட 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் நிறைந்த எலி மருந்து (ரேட்டால்) இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூச்சி மருந்து விற்பனை நிலையங்களிலும் சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் நிறைந்த எலி மருந்து இருப்பு மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிறு மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த மருந்தினை இருப்பு வைத்து விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேளாண்மை துறை, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த எலி மருந்தானது மனிதர்கள் மற்றும் பிற உயிர்களின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ளது.

எனவே இந்த எலி மருந்து விற்பனை தொடர்பான தகவல்கள் மற்றும் விவரங்கள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்