< Back
மாநில செய்திகள்
வேறுபாடு கண்டறியப்பட்ட 1 125 கிலோ நெல் விதை விற்பனைக்கு தடை
விழுப்புரம்
மாநில செய்திகள்

வேறுபாடு கண்டறியப்பட்ட 1 125 கிலோ நெல் விதை விற்பனைக்கு தடை

தினத்தந்தி
|
13 Jun 2022 4:45 PM GMT

விழுப்புரம் தனியார் விற்பனை நிலையத்தில் வேறுபாடு கண்டறியப்பட்ட 1,125 கிலோ நெல் விதை விற்பனைக்கு தடை விதித்து விதை ஆய்வு இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்

விழுப்புரம்

இணை இயக்குனர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கு மற்றும் காகுப்பத்தில் உள்ள தனியார் விதை உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் சென்னை இயக்குனரக விதை ஆய்வு இணை இயக்குனர் மல்லிகா ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதைகள் பெறப்பட்டவுடன் அவற்றின் முளைப்புத்திறனை உறுதிப்படுத்த வேளாண்மை கிடங்கில் முளைப்புத்திறனை பரிசோதனை செய்து அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யும்படியும், விதை ஆய்வாளர்களால் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வில் தேறாத விதைக்குவியல்களை விதையில்லா உபயோகத்திற்கு உடனடியாக தீர்வு செய்யுமாறும், பூச்சிநோய் தாக்காத வண்ணம் விதைகளை சேமிக்கவும் அறிவுறுத்தினார்.

நெல் விதைக்கு விற்பனை தடை

அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்த அவர், கொள்முதல் செய்யப்படும் விதைக்குவியல்களுக்கான கொள்முதல் பட்டியல், பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச்சான்று ஆகிய ஆவணங்கள் பெறப்பட்டு இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் ஆகியவற்றை முறைப்படி பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் வேறுபாடு கண்டறியப்பட்ட நெல் ஏடிடி 37 ரக ஆதார நிலை 2 விதைக்குவியல் 1,125 கிலோவு விற்பனைக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டது. அதோடு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து விவரம் தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சோழகனூரில் அமைக்கப்பட்ட மணிலா விதைப்பண்ணை, விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்தில் பல்வேறு பயிர் விதைகளில் பகுப்பாய்வு செய்யும் முறைகளை கேட்டறிந்த விதை ஆய்வு இணை இயக்குனர் மல்லிகா விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி விதைகள், உற்பத்தி நிலையில் இருந்து விவசாயிகளை சென்றடையும் வரை அனைத்து நிலைகளிலும் விதைகளின் தரம் கெடாமல் சேமித்து தரமான விதைகள், விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன், விதைச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன், விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி, நடராஜன் மற்றும் விதைச்சான்று அலுவலர்கள், விதை பரிசோதனை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்