மதுரை
மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை
|மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 17-ந்தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 17-ந்தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது. இதனால், அவைகளை வீட்டில் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க கூடாது என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று, செல்லூர் மருதுபாண்டியர் நகர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கிளிகள் வளர்க்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தினர். அப்போது, வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளிகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஒலி பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள், தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த கிளிகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒரு சிலர் கூண்டுகளோடு ஒப்படைத்த காட்சிகளையும் காணமுடிந்தது. பல மாதங்களாக, வருடங்களாக தங்கள் குடும்ப உறுப்பினர்களை போல் வளர்த்து வந்த கிளிகளை, கண்ணீர் விட்டு கதறி அழுதபடியும் ஒருசிலர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து சென்றனர்.
எச்சரிக்கை
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டத்தின் படி கிளிகள் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் வளர்க்கக்கூடிய கிளிகளை ஒப்படைக்ககோரி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அதன்படி வருகிற 17-ந்தேதிக்குள், அந்த கிளிகளை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காமல் விதிமீறி, அனுமதியின்றி கிளிகள் வளர்க்கும் நபர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது சிறைபிடிக்கப்படும் இந்த கிளிகள் அனைத்தையும் மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அங்கு கிளிகளுக்கு ஏதேனும் காயம் உள்ளதா, அவைகளின் சிறகுகள் சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்வோம். அதன்பின்னர் சரியான உடல்நிலையில் இருந்தால் அந்த கிளிகளை பசுமை நிறைந்த இடத்தில் விடுவிப்போம். 17-ந்தேதிக்குள் மதுரையில் உள்ள அனைத்து இடங்களிலும் கிளிகள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, அதனை பாதுகாப்போம் என்றனர்.
ஆட்டோ டிரைவர் குமார் மற்றும் கங்கா ஆகியோர் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக வீட்டில் கிளி வளர்த்து வந்தோம். தற்போது அதனை வளர்க்கக்கூடாது என கூறுகிறார்கள். இதனால், செய்வதறியாது திகைத்துள்ளோம். குடும்ப உறுப்பினர்போல் எங்கு சென்றாலும் அதனை அழைத்து சென்றோம். தற்போது அதனை பிரிந்து செல்வது மனதளவில் வருத்தத்தை கொடுக்கிறது என்றனர்.