< Back
மாநில செய்திகள்
முதுமலையில் டிரோன்கள் பறக்க தடை
நீலகிரி
மாநில செய்திகள்

முதுமலையில் டிரோன்கள் பறக்க தடை

தினத்தந்தி
|
2 Aug 2023 4:15 AM IST

முதுமலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி வருகிறார். இதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கூடலூர்

முதுமலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி வருகிறார். இதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஜனாதிபதி வருகை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால், அதில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த மாதம் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பொம்மன், பெள்ளி ஆகியோர் சந்தித்து முதுமலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று ஜனாதிபதி வருகிற 5-ந் தேதி கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு மாலை 3.45 மணிக்கு வருகை தருகிறார். இதைத்தொடர்ந்து முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிரோன்கள் பறக்க தடை

இதையடுத்து ஊட்டியில் அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். நேற்று 2-வது நாளாக தெப்பக்காடு முகாமில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி வருகையையொட்டி முதுமலை புலிகள் காப்பக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதுமலை, மசினகுடி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 900 போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஜனாதிபதி வருகை தர உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்