சென்னை
கோவில்களில் செல்போன்களுக்கு தடை: பக்தர்கள் கருத்து
|கோவிலுக்கு வருபவர்கள் தங்கள் செல்போனை கோவில் வளாகத்திற்குள் வரும் போது அணைத்துவிட்டு வர அறிவுறுத்தலாம் என்று பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை.
செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களின் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐக்கோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்
திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
ஆவல் அதிகரிப்பு
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு
அம்பத்தூரைச் சேர்ந்த பி.விஜயகுமாரி கூறும்போது, 'பொதுவாக இந்துக்கள் குறிப்பாக பெண்கள் தினமும் ஒன்று அல்லது 2 முறை மற்றும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கோவில்களுக்கு செல்வது வழக்கம். அங்கே முகம், முகமாய் இறைவனை தரிசிக்கும் போது எங்களின் மனம் முழுவதும் இறைவனிடத்திலேயே நிறைந்து இருக்கிறது.
பக்தர்களாகிய நாங்கள் இறைவனிடம் வேண்டுதல் தெரிவிக்கும்போது அருள் பாலிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அப்போது, எங்கள் மனம் இறைவனை நோக்கியே இருக்கும். அப்போது பக்தர்களின் சிலருடைய செல்போன் மணி அடித்தாலே அல்லது செல்போனில் சத்தமாக பேசினாலோ, எங்கள் கவனம் சிதறல் ஏற்படுகிறது.
சில நேரங்களில் மூலவருக்கும், எங்களுக்கும் இடையே நின்று செல்போனில் சிலர் செல்பி எடுக்கின்றனர். பலநேரங்களில் அர்ச்சகர் கோவில் மணியை அடித்து தீபாராதனை காண்பிக்கும் போது சிலருடைய செல்போன் சப்தம் கேட்டால் அந்த வழிபாட்டின் புனிதத் தன்மையே கெட்டு விடுகிறது.
இதனை தவிர்ப்பதற்காக கோவில்களுக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவை முழு மனதாக வரவேற்கிறோம். பக்தர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பாகும். இனி கோவில்களில் அபிஷேகம் செய்வதற்கான தட்டுகள் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் இனி கோவில்களில் அமைதி நிலவும். பூஜை மணி சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்காது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி'. பக்தர்களின் செல்போன்களை வாங்கி பத்திரமாக வைப்பதற்கும், கோவிலைவிட்டு புறப்பட்டு செல்லும் போது திருப்பிக் கொடுப்பதற்கும் நல்ல பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தர வேண்டும்" என்றார்.
செல்போன் இல்லாதவர்கள் எவருமில்லை
சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் என்ஜினீயர் தீபா கூறும்போது, 'கோவிலுக்கு வருவதே அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதற்காக தான். மனதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தர சாமியிடம் கேட்க வரும் போது, அங்கும் பிரார்த்தனைக்கு தடை ஏற்பட கூடாது.
கோவிலுக்கு வருபவர்கள் தங்கள் செல்போனை கோவில் வளாகத்திற்குள் வரும் போது அணைத்துவிட்டு வர அறிவுறுத்தலாம். அதுதான் நிர்வாகத்திற்கும் நல்லது. கூட்டம் அதிகமாக இருக்கும் போது அனைவருடைய செல்போன்களையும் வாங்கி பாதுகாப்பது என்பது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது' என்றார்.
செல்போனுக்கு தனி கவுண்ட்டர்
சமயபுரம் மாரியம்மன் கோவில் ஓய்வு பெற்ற உதவி கண்காணிப்பாளர் ஆர்.வாசுதேவன் கூறும் போது, 'கோவில்களில் செல்போன் அனுமதிக்ககூடாது என்பது ஒரு சிறந்த நடைமுறை. இதனால் நமது கோவில்களின் பாரம்பரியம் காக்கப்படும்.
திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்கள் போன்று கோவில்களின் நுழைவு வாயில்களில் கவுண்ட்டர்கள் அமைத்து பாதுகாத்து தரிசனம் முடித்துவிட்டு வரும் பக்தர்களின் செல்போனை மீண்டும் ஒப்படைக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். இதனை பக்தர்களும் முழுமனதுடன் வரவேற்பார்கள்' என்றார்.
டிஜிட்டல் உலகம்
பல்லாவரத்தைச் சேர்ந்த டெய்லர் உமா சங்கர் கூறும் போது, 'டீக்கடையில் டீ குடித்த பின்னர் காசு கொடுப்பதற்கே செல்போனை தான் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் உலகில் இருக்கும் நம்மை செல்போன் அங்கு கொண்டு வர கூடாது, இங்கு கொண்டு வர கூடாது என்பது கூறுவது சரியல்ல. கோவில்களில் பூஜைக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் என்று கருதினால் கோவில் ராஜகோபுரத்தை கடந்து செல்லும் போது மட்டும் செல்போன்களை அணைத்துவிட்டு செல்ல கோவில் ஊழியர்கள் பக்தர்களுக்கு அறிவுறுத்தலாம்.
பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வந்தால் அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும். செல்போன் கேமராவில் தேவையில்லாத படங்களை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும், கோவில் புனிதத்தை காக்க நாமும் அறநிலையத்துறையுடன் கைகோர்த்து செல்லலாம்' என்றார்.
மூலவரை படம் பிடிக்க ஆர்வம்
காளிகாம்பாள் கோவிலை சேர்ந்த காளிதாஸ் சிவாச்சாரியார் கூறும் போது, 'தகவல் தொடர்பு என்பது தேவை என்பது தற்போது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும், கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களில் பலர் சாமியை வழிபாடு செய்வதை விட, அனுமதியின்றி மூலவரை படம் பிடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். படம் பிடிப்பதோடு நிற்காமல் சமூக வலைத்தளங்களிலும் பரப்பி விடுகின்றனர். இது ஏற்புடையது அல்ல.
அதேபோல் செல்போன் கொண்டு வருபவர்கள் போனை சைலண்டில் போட்டு இருந்தாலும் குறுந்தகவல் வந்தால் செல்போனை எடுத்து பார்க்கத்தான் முயற்சிக்கின்றனர். அதேபோல், கோவில்களில் இருக்கும் போது செல்போனில் விரும்பத்தகாத செய்திகளை கேட்பது மனதை புண்படுத்துகிறது. எனவே கோவில்களுக்கு உள்ளே செல்போன் கொண்டு வர கூடாது என்பதை வரவேற்கிறேன். கோவிலின் புனித தன்மையும் காக்கப்படும் ' என்றார்.