பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை அமலுக்கு வந்தது..!
|பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
திண்டுக்கல்,
பழனி முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்குள்ள மூலவர் சிலை, போகர் சித்தரால் நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது. பழனிக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க பழனி கோவிலில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்து வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
செல்போன் தடை அமலுக்கு வந்தது
குறிப்பாக மூலவர் சன்னதியில் செல்போன், கேமரா கொண்டு படம் எடுக்க தடை உள்ளது. ஆனாலும் சிலர் செல்போனில் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. ஆகவே பழனி கோவிலில் செல்போனுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதன்படி, பழனி முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன், கேமரா கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று (அக்.01) முதல் அமலுக்கு வந்தது. படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் செல்போன், கேமராக்களை ரூ.5 கட்டணம் செலுத்தி வைத்துக்கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை அமலுக்கு வந்துள்ளதால் மலை அடிவார பகுதியில் இதுபற்றிய அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை என்பது வரவேற்பை பெற்றிருந்தாலும், சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டு உள்ளன. அதாவது அடிவாரத்தில் அல்லாமல் மலைக்கோவிலில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைத்தால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது.