திருவண்ணாமலை
நடுரோட்டில் அமர்ந்து பக்ரீத் தொழுகை
|தண்டராம்பட்டு அருகே இருதரப்பு மோதல் காரணமாக நடுரோட்டில் அமர்ந்து பக்ரீத் தொழுகை நடந்தது.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு ஊராட்சியில் இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கே இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.
இதனால் பள்ளிவாசலில் இருதரப்பினரும் தொழுகை செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒருதரப்பினர் தாசில்தாரிடம் பக்ரீத் பண்டிகைக்கு பள்ளிவாசலில் தொழுகை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து மனு அளித்தவர்கள் பள்ளிவாசலுக்கு தொழுகை செய்வதற்காக இன்று காலை சென்றபோது இன்னொரு தரப்பினர் பள்ளிவாசலை மூடிவிட்டு ஈத்கா திடல் பகுதியில் தொழுகை செய்து கொண்டிருந்தனர்.
இதனால் இன்னொரு தரப்பினர் தொழுகை செய்வதற்கு இடம் விடாததால் தரடாப்பட்டில் இருந்து கெ.கொழுந்தம்பட்டு செல்லும் சாலையில் நடுரோட்டில் அமர்ந்து தொழுகை செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தனூர் அணை போலீசார் மற்றும் தாசில்தார் சக்கரை, வருவாய் ஆய்வாளர் சத்யநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாள் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் எதிர்தரப்பினர் பள்ளிவாசல், ஈத்கா திடலை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கூறினர்.
இதனால் அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.