மயிலாடுதுறை
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
|மயிலாடுதுறையில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை அன்று ஏழை, எளிய, மக்களுக்கு குர்பானி கொடுப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளிவாசல், தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.
சிறப்பு தொழுகை
மயிலாடுதுறை சுப்பிரமணியபுரத்தில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை நடந்தது. பேச்சாளர் அஷ்ரப் அலி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இதில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது பேசினார். சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிறப்பு தொழுகையில் மாவட்ட நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருவாவடுதுறை
இதேபோல் மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை பகுதியில் உள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் ஷேக் முகமது ரஹீம் தலைமையில் நடந்த தொழுகையில் உலக நன்மை வேண்டியும், கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்று முழுமையாக நீங்கி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருவாவடுதுறை அல் மதரஸதுல் ஹைருன்னிசா பள்ளிவாசலில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடந்தது .