கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்;முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
|குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஏழை, எளியோரின் பசி தீர்த்து கொண்டாடும் தியாகத் திருநாளாக இந்த பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையையொட்டி நேற்று காலையில் நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பாவாகாசிம் ஜூம்மா மஸ்ஜித் முன்பு உள்ள மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் சிறுவர், சிறுமிகள் கை குலுக்கியும், கட்டித்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அறுசுவை உணவு
இதை தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழை, எளியவர்களுக்கு உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கியும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகளை பரிமாறியும் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் நாகர்கோவில் வடசேரி, மணி மேடை, பெருவிளை, மீனாட்சிபுரம், இடலாக்குடி, திருவிதாங்கோடு, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, தேங்காப்பட்டணம், லாயம், திட்டுவிளை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழுகைகள் நடைபெற்றன.