< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
திருப்பூர்
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

தினத்தந்தி
|
26 Jun 2023 10:00 PM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

போடிப்பட்டி,

கால்நடை வளர்ப்பு

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு உறுதுணையாக உள்ளது. அத்துடன் ஒரு சிலர் கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றனர். பசுக்களை வளர்த்து பால் உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டுவதுடன், இறைச்சிக்காக ஆடுகளை வளர்த்து விற்பனை செய்வதும் சிறந்த வருவாய் ஈட்டும் தொழிலாக உள்ளது. சமீப காலங்களாக இறைச்சி விலை கடும் உயர்வை சந்தித்ததால் நுகர்வு குறைந்து விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இதனால் ஆடுகள் விற்பனையிலும் சிறிது தேக்க நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஆடுகள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது கால்நடை வளர்ப்போருக்கு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

பக்ரீத் பண்டிகை

தியாகத்தின் பண்டிகை என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை பிறை தோன்றுவதன் அடிப்படையில் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை அல்லாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான ஒரு செயலாக இப்ராஹிம் நபி தனது மகன் இஸ்மாயிலைப் பலியிடத் தயாராக இருந்ததை நினைவுபடுத்துகிறது.

இப்ராஹிம் நபி தியாகம் செய்யத் தயாரானபோது, அல்லா தலையிட்டு இஸ்மாயிலுக்குப் பதிலாக ஒரு ஆடு பலியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையன்று ஆட்டை பலியிட்டு வருகின்றனர். இதனால் தற்போது ஆடுகளுக்கான தேவை அதிகரித்து விற்பனை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல் நல்ல விலையும் கிடைக்கிறது.

மகிழ்ச்சி

இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:- மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளதால் பசுந்தீவனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைத்தீவனங்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் செம்மறி ஆடு, வெள்ளாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்புக்கு கூடுதல் செலவு பிடிக்கிறது.

இந்த நிலையில் இதுபோன்ற பண்டிகை தினங்கள் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. கடந்த சில வாரங்களாகவே படிப்படியாக ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படும் பக்ரீத் பண்டிகை பலதரப்பினருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்