< Back
மாநில செய்திகள்
மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தற்கொலை - மனைவி, குழந்தைகள் ஒதுக்கியதால் விரக்தி
மாநில செய்திகள்

மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தற்கொலை - மனைவி, குழந்தைகள் ஒதுக்கியதால் விரக்தி

தினத்தந்தி
|
22 Aug 2022 5:47 AM IST

திருவண்ணாமலை அருகே மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தேவாங்கபுரத்தை சேர்ந்த ராஜேசுவரி (60) என்ற பெண்ணிடம் கடன் வாங்கியிருந்தார்.ராஜேசுவரி அவரிடம் கடன் தொகையை திரும்ப திரும்ப கேட்டு வந்தார்.

இதனால் கணேசன் ஆத்திரத்துடன் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ராஜேசுவரி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது நகையும் பறிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கணேசனும் தலைமறைாகி விட்டார்.

இந்த வழக்கில், கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, நெசவாளி கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது மனைவி, குழந்தைகள் சென்னைக்கு சென்று விட்டனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணேசன் ஜாமீனில் வந்துள்ளார். ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையிலிருந்து வர மறுத்து விட்டனர். இதனால் விரக்தியடைந்த கணேசன், நேற்று காலை தனது வீட்டு முருங்கை மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கண்ணமங்கலம் போலீசில் அவரது உறவினர் நவீன் (31) கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசன் உடலை கைப்பற்றினர். முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் கணேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்