< Back
மாநில செய்திகள்
ராணுவ வீரர் கொலை வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ராணுவ வீரர் கொலை வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
11 March 2023 12:11 AM IST

ராணுவ வீரர் கொலை வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த மாதையன் என்பவரது மகன்கள் பிரபாகரன், பிரபு. ராணுவ வீரர்களான இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி பிரபாகரனின் மனைவி அங்குள்ள குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளைத் துவைத்துள்ளார். அதை அவ்வழியே சென்ற நாகரசம்பட்டி பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலரான சின்னசாமி கண்டித்துள்ளார்.

இதில், ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கும், சின்னச்சாமி குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருதரப்பும் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சி்ன்னச்சாமி, அவரது மகன் புலிப்பாண்டி, காளியப்பன், இவர்களின் உறவினர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் புலிப்பாண்டி, காளியப்பன், ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால், ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2 பேரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்