< Back
மாநில செய்திகள்
பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

தினத்தந்தி
|
1 Oct 2023 2:20 AM IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்தது.

தொடர் மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசான மழை பெய்தது.

அம்பை, சேரன்மாதேவி, நாங்குநேரி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

நீர்மட்டம் 3 அடி உயர்வு

இதனால் 70.50 அடி உயரம் இருந்த நீர்மட்டம் மேலும் 3.25 அடி உயர்ந்து, 73.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 722 கன அடி வந்து கொண்டிருந்தது. இது நேற்று வினாடிக்கு 2,907 கனஅடியாக அதிகரித்தது. இதையொட்டி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 955 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆறு மற்றும் கன்னடியன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 4.85 அடி உயர்ந்து 87.20 அடியாக உளளது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணை நீரமட்டம் 45.50 அடியாக உளளது. இதுதவிர கொடுமுடியாறு அணை பகுதியிலும் மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 19 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை நிரம்பி விட்டது. அணைக்கு வருகிற 18 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேறுகிறது.

இதுதவிர கடனா, ராமநதி, அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியாகவும், ராமநதி அணைக்கு நீர்வரத்து 60 கன அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் -13, மணிமுத்தாறு -9, அம்பை -5, சேரன்மாதேவி -3, நாங்குநேரி -3. இதுதவிர நேற்று முன்தினம் இரவில் சேர்வலாறு -9, ராதாபுரம் -10, களக்காடு -3, கன்னடியன் அணைக்கட்டு -9, கொடுமுடியாறு -10, மாஞ்சோலை -24, காக்காச்சி -30, நாலுமுக்கு -41, ஊத்து -48.

தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி -2, செங்கோட்டை -5, தென்காசி -7, கடனா -5, ராமநதி -8, குண்டாறு -21, அடவிநயினார் -3.

மேலும் செய்திகள்