பாபா சித்திக் கொலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
|பாபா சித்திக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் மந்திரி பாபா சித்திக் (66) மும்பை பாந்தரா கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. சரத் பவார், அஜித் பவார் என இரு பிரிவுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிந்திருக்கும் நிலையில், நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக், அஜித் பவாரின் பிரிவை சார்ந்தவர் ஆவார். அஜித் பவார் பாஜக கூட்டணியிலும் சரத் பவார் காங்கிரஸ் கூட்டணியிலும் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் மூன்று பேர் கொண்ட கும்பல் இணைந்து பாபா சித்திக்கை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடனடியாக அவரை லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இந்த சம்பவம் தொடர்புடைய மூன்று பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்
இந்நிலையில் பாபா சித்திக் இறப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்
குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை.
பாபா சித்திக்கின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.