< Back
மாநில செய்திகள்
ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி; சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் உயர்வு
சென்னை
மாநில செய்திகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி; சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

தினத்தந்தி
|
26 Sept 2022 9:57 AM IST

ஆயுதபூஜை தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் விடுமுறை

ஆயுதபூஜை விழா அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5-ந் தேதி (புதன்கிழமை) விஜயதசமி. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள், வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

இதனால் பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. எனவே பஸ், ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனா். ஆனால் தொடர் விடுமுறையையொட்டி உள்நாட்டு விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இது பயணிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கட்டணம் உயர்வு

அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. ஜெய்ப்பூருக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரையிலும், கொல்கத்தாவுக்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரையிலும், ஆமதாபாத்துக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரம் வரையிலும், புனேவுக்கு ரூ.9 ஆயிரம் வரையிலும், மும்பைக்கு ரூ.16 ஆயிரம் வரையிலும், மதுரைக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரையிலும் கட்டணங்கள் உயர்ந்து உள்ளன.

அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்பட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது, "பயணிகள் கூட்டத்தால் கட்டணம் உயா்த்தப்பட்டு உள்ளதாக கூறுவது தவறு. குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட இருக்கைகள் மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற இருக்கைகளுக்கு 2 அல்லது 3 விதமான கட்டணங்களை நிா்ணயித்திருப்போம். முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும், அதன்பின்பு வருபவா்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது" என்றனர்.

ஆனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளதாக கூறி இந்த ஆண்டு 2 முறை டிக்கெட் கட்டண உயா்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்